செம்ம என்ர்ஜியில் இருக்கிறோம். இன்று வியாசர்பாடி
சென்று வந்தோம். DPAC & வியாசைத் தோழர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை மையத்தைப் பார்த்தோம்.
உடலிலும் மனதிலும் எனர்ஜி பாய்ந்தது. மெய் சிலிர்த்தது. கண்கள் கசிந்தன.
அணி வகுத்து நிற்கும் ஆட்டோக்கள். உயிர் காக்கும்
ஆக்சிஜன் சிலிண்டர்கள். மக்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் மாணவிகள். அழைப்புகளுக்கு
பதில் சொல்லும் தொண்டர்கள். அழைப்பு வந்ததும் பாய்ந்து செல்லும் ஓட்டுநர்கள். ஆக்சிஜனை
நிரப்ப ஓடியாடும் நிர்வாகிகள். தக்க சமயத்தில் தேநீரும், உணவும் கொடுக்கும் தொண்டர்கள்
….. இது தான் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.
இல்லை. இது மட்டுமில்லை. 25 இளைஞர்களின் முடிவற்ற
எனர்ஜி. இது தான் DPAC & வியாசைத் தோழர்களின் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.
”முன்னாடி அண்ணன்கள் தான் கஷ்டமான வேலைகளை செய்வாங்க.
இப்போ நாங்க பாதி வேலை செய்யுறோம். சமமா இருக்கிறோம்.” என்று பெருமை பொங்கும் லாவண்யா,
திரிஷா, ரஸியா பானு, ஆர்த்தி.
மையத்தை உருவாக்கும் போது, தகரம் கிழித்து ரத்தம்
சொட்டியது. அந்த வலியிலும் ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைந்த வீரநரசிம்மன்.
வீடு, வீடாக சென்று முடி வெட்டி, அதில் கிடைக்கும்
வருமானத்தை ஆம்புலன்ஸ் மையத்திற்கு அளிக்கும் கவி.
இது போல நமக்கு எனர்ஜியை அள்ளிக் கொடுக்கும்
இன்னும் பல சூரியன்களைப் பற்றி நாளை எழுதுவோம். இன்றைய அனுபவத்தை இப்படி சொல்லலாம்.
இது வேற, வேற, வேற லெவல்.
இனி தைரியமாக சொல்லலாம்.
“வுட்ர மாட்டோம்”.
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)
-சாரல்



Comments
Post a Comment