மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் .
அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம்.
ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு.
பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல.
குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல.
ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார்.
அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment