”ஏய் வரிசையில நில்ரா.”
இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு.
இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.
சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம்.
அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி.
“எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி.
”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார்.
செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?
*** ***
வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.
மூத்த சூப்பர்வைசர் உத்தரவிடுகிறார். ”சல்யூட்”.
6 பேரும் சல்யூட் செய்கிறார்கள். அக்கம் பக்கம் நின்றவர்கள் கைதட்டுகிறார்கள். அப்புராஜின் கண்கள் கசிகின்றன.
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments
Post a Comment