”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள”
செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது.
நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா?
சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.
*** ***
சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.
நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.
அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.
*** ***
சமூகத்திற்கான தனது வேலைகளைப் பற்றி சுரேஷ்பாபு மற்றவர்களிடம் பேசுவதில்லை. கேலி பேசுவார்கள் என்று தயங்கம்.
இப்போது நண்பர்கள் பேசுகிறார்கள், பெருமையாக. உறவினர்கள் பாராட்டுகிறார்கள், அக்கறையோடு. அறிமுகமானவர்கள் நெருக்கமாகிறார்கள். அனைவரும் இலவச ஆட்டோ ஆக்சிஜன் இயங்க உதவி செய்கிறார்கள்.
சுரேஷ்பாபுவின் முகத்தில் மகிழ்ச்சி. முடிக்கும் போது சொல்கிறார்.
“எல்லாரையும் ஒண்ணா சேர்க்கிறது மக்களுக்கான வேலை மட்டும் தான்”
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment