உங்க வீட்டுப் பிள்ளை!
”அம்மாவை காப்பாத்திட்டிங்க தம்பி.”
கால்களில் விழுந்தார் அவர். பதறிய கவியரசு தடுக்கிறார்.
*** ***
சில மணி நேரம் முன்பு அழைப்பு வந்தது. கவியரசின் ஆக்சிஜன் ஆட்டோ பறந்து வந்தது. இடம் கே.எம்.சி மருத்துவமனை.
கட்டிடத்தின் தாழ்வாரத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார் ஒரு அம்மா. கோவிட் நோயாளி. படிப்படியாக உயிர் அடங்கிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் அளவு 60-க்கும் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனையில் இடம் இல்லை. காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார் அந்த தாயின் மகன்.
மகனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். அம்மாவிற்கு ஆக்சிஜன் கொடுக்கிறார். இரண்டு மணி நேரம். ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. அம்மாவின் முகம் தெளிகிறது.
அம்மாவை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைகிறது. அட்மிஷன் கிடைத்து விட்டது. அம்மா நம்பிக்கையோடு நடந்து செல்கிறார். இனி கவலை இல்லை.
அந்த மகனைப் பொறுத்தவரை கவியரசு கடவுளாகத் தெரிகிறார். தன் தாய்க்கு உயிர் கொடுத்தவர் அல்லவா? கவியரசு மறுக்கிறார்.
“எங்களை கடவுளா பார்க்க வேணாம். உங்களில் ஒருத்தனா பாருங்க. உங்க வீட்டுப் பிள்ளையா பாருங்க.”
“வுட்ர மாட்டோம்”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)


Comments
Post a Comment