மே-10,1857 - இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிழக்கிந்திய கம்பெனியின் குரல்வளைகளில் சிப்பாய்கள் ஏறிமிதிக்கத் தொடங்கிய நாள், கம்பெனியின் படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் - வட இந்திய சுதந்திர போரை தொடங்கி வைத்த நாள். தன் ஆட்சி அதிகாரம் பறிபோகி விடுமோ என்கிற பயத்தில் கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு நேரடியாக ஆங்கிலேய அரசின் ஆளுகைக்குள் இந்தியாவை கொண்டு வரவைத்த வரலாற்று நிகழ்வு தொடங்கிய நாள். (கிழக்கிந்திய கம்பெனி என்பது ஆசியா மற்றும் இந்தியாவை வணிகத்தின் மூலம் அடிமைப்படுத்த ஆங்கிலேய அரசு உருவாக்கிய நிறுவனம்)
மே-9,1857 - மீரட்டில் தனது இந்திய சிப்பாய்களுக்கு மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்களை கம்பெனி தந்தது - இது அந்த வீரர்களின் மத உணர்வை தாக்கியது அதனால் அவர்கள் அந்த தோட்டாக்களை பயன்படுத்த மறுத்தனர் - பயன்படுத்த மறுத்த அனைவரும் வேலைநீக்கம் செய்யப்பட்டதோடல்லாமல், அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, இந்தப் பின்னனியில் தான் மே-10 ஆம் தேதி மீரட்டில் சிப்பாய்களின் கலகம் வெடித்தது - சிறைகள் தகர்க்கப்பட்டது - தங்களது தோழர்கள் அனைவரும் விடுதலை ஆனார்கள் - ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோபம் பீரிட்டெழுந்தது - அவர்களது கண்ணில் பட்ட ஆங்கிலேய அதிகாரிகளும் , சிப்பாய்களும் பிணமானார்கள்.
கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேய அரசும் இந்த சிப்பாய் கலகத்தை விட - அதில் வெளிப்பட்ட இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கண்டஞ்சியது. சாதிகளாக, மதங்களாக பிரித்தாளும் தனது வழிமுறை இங்கே பயன்படவில்லை என்பதைக் கண்டஞ்சியது. இது வெறும் மதநம்பிக்கையை சீண்டியதால் வந்த கலகமில்லை என கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஆங்கிலேய அரசுக்கும் நன்கு புரிந்தது. இந்த சிப்பாய்கள் அனைவரும் கிழக்கிந்திய கம்பெனியின் மிதமிஞ்சிய வரிவிதிப்பால், கட்டற்ற சுரண்டலால் செல்லாக்காாசாக்கப்பட்டு, வாழ்க்கையை ஓட்ட வேறு தொழில் கிடைக்காமல் இராணுவத்தில் வந்து வேலைக்குச் சேர்ந்த விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோர் தான்.
இராணுவத்தில் வேலை கொடுத்து சோறும், சீருடையும் வழங்கி பராமரிக்கப்பட்டு வந்தபோதும் கிழக்கிந்திய கம்பெனியின் கொடுமைகள் நினைவுகளை விட்டு அகலவில்லை, உள்ளூர கன்னறு கொண்டே இருந்தது. அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது ஆங்கிலேய ஆட்சியும், அதிகாரிகளும், சிப்பாய்களும் அவர்களை நடத்திய விதம் - “பன்றிகள் என்றும் நீக்ரோக்கள் என்றும்” இழிவாக அழைப்பதும் நடத்துவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து, புழுங்கிப் புழுங்கி மே-10,1857ல் சிப்பாய் கலகமாக - வட இந்திய சுதந்திரப்போராக வெடித்தது. மே-10,1857ல் தொடங்கிய இப்போர், ஜூலை 08,1859 வரை நீடித்தது. ஜான்சி ராணி, ஹஸ்ரத் மகல், நானா சாகேப் போன்ற பலரும் இதில் பங்கெடுத்துக்கொண்டனர்.



Comments
Post a Comment